10/13/2012

என் தோழி

நீ  சத்தமாய் 
சொல்லியே  எனைச் 
சட்டத்துக்குள் 
நிறுத்துகிறாய் 
மீளாதபடி .....

உன் 
கட்டளையை 
சட்டத்திற்குள் நின்றே 
வெற்றி பெற 
முட்டிக் கொண்டிருக்க,
நம் நட்போ 
முட்டிப் போட்டு 
சிரித்துக் கொண்டிருக்கிறது...

எத்தனையோ 
நட்பு , எனை 
ஏற்றுக்  கொண்டிருந்தது 
மாற்றமின்றி...

நீயும் அப்படியே 
ஏற்றுக் கொண்டாய் தான்,
மாற்றம் ஏதும் 
சொல்லாமலே ஆனாலும் 
மாற்றிக் கொண்டிருக்கிறாய்...!

அப்படியே தான் 
 நம் நட்பும் 
மாறிக் கொண்டிருக்கிறது 
வானவில்லிலிருந்து 
வானமாய் ....!

உன் இரவு
என் பகலாய்,
என் இரவு 
உன் பகலாய்,
நம் நட்பு 
இரவும் பகலுமாய்...
நானோ பரவசமாய்...

எலிச் சிரிப்பு,
நான் சிரிக்க..
எதற்கும் ம் ம் ம் ,
நான் வெறுக்க..
எகத்தாளப் பேச்சு,
நான் அடங்க..
அலட்சியப் போக்கு,
நான் வருந்த..
உன் அன்போ,
நான் வியக்க..
உன் குரல்,
நான் விரும்ப..
உன் முழியோ,
நான் ரசிக்க..
உன் அக்கறை,
இரு புறம் மோதினாலும் 
அடங்கி போகும் 
இரு கரையே...
 
செல்வ ராணி,
உன் செல்வம்
உன் அன்பு 
நீ அன்பின் ராணி..
என் நட்பின் 
ராணியும் கூட...

 நட்பே ,
இனி கோபப்பட்டால் 
அவகாசம் கொடுத்துக் 
கோபப்படு - அப்பதானே 
உனக்கான 
வரிகளைத் தந்து 
சமாதனம் செய்ய இயலும்..?

யாரும் யாருக்கும் 
இணை இல்லை,
அப்படியிருக்க ,
என் பிரிந்த நட்பு 
எப்படி இணையாகும் 
இன்று மலர்ந்த 
நட்புக்கு..?
எனக்கும் தெரியும் 
இருந்தும் என்ன செய்ய 
உன் அவசர கோபத்துக்கு...?

இங்கு எல்லாமே 
சாத்தியம் எனும்போது,
நம் நட்பில் 
கோபமும், சமாதானமும் 
சாத்தியம்தானே...?!
கோபப்படு அதிகமாகவே 
என் மீது மட்டும்,
நம் நட்பு மீதல்ல...!

இதற்கு நான் 
தகுதி இல்லை எனச் 
சொல்வாய் - அப்படிச் 
சொல்வது கூட 
தகுதி தானே...?

என் நட்பே !

நட்பான தோழியே !